தமிழ்விசை என்ற செயலி மொசில்லா
ஃபயர்ஃபாக்ஸ்,
தண்டர்பேர்ட் மற்றும்
சாட்ஜில்லா அரட்டை செயலிகளில் தமிழ் எழுத உதவும் ஒரு நீட்சி. இது
தமிழா அமைப்பின் கூட்டுமுயற்சியில் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வரும் பல்வேறு செயலிகளில் ஒன்று.
எ-கலப்பை போன்ற மென்பொருட்களை தங்கள் கணினியில் நிறுவ தேவையான admin உரிமைகள் இல்லாதவர்களும் இந்த நீட்சியை நிறுவி தமிழெழுத முடியும். மேலும் இது விண்டோஸ், லினக்ஸ், மேக் என்று மொசில்லா இயங்கும் அனைத்து இயங்குதளங்களிலும் பயன்படுத்த முடியும்.
தமிழ்விசையின் பதிப்பு 0.3, 12 டிசம்பர் 2006 அன்று வெளியிடப்பட்டது.
வெளியீடுபற்றிய அறிவிப்பை தமிழ்விசை திட்டத்தின் உறுப்பிணர் கோபி
தமிழ்கணிமை மடற்குழுவில் அறிவித்தார்.
Posted by mugunth at 01:17 AM. Filed under: General
No comments • Permalink
மைக்ரோசாப்ட் நிறுவணத்தின் msn.com தளம் தற்போது தமிழில் வருகிறது. இந்த செய்தியை
"ப்ரியமுடன் கேபி" என்பவரின் என்ற பதிவிலிருந்து தெரிந்துகொண்டேன்.
தமிழில் செய்திகளை கொடுப்பதற்கு மைக்ரோசாப்ட் நிறுவணத்திற்கு நன்றி. அவர்கள் தளத்தின் செய்திகளுக்கு செய்தியோடை வசதி செய்து தந்திருந்தால் இன்னும் உபயோகமாக இருந்திருக்கும்.
Posted by mugunth at 01:06 PM. Filed under: கணினி
3 comments • Permalink
இந்த தமிழ் புத்தாண்டு தினத்தன்று, தமிழ் பயர்பாக்ஸ் (பதிப்பு 1.5.0.1) உலாவி பொதி தமிழா குழு சார்பாக வெளியிடப்பட்டது.
அதன் அறிவிப்பை இந்த சுட்டியில் காணலாம்.
http://thamizha.com/modules/news/article.php?storyid=15
பயர்பாக்ஸ் இணைய உலாவி தற்போது மிகவும் பிரபலமாகிகொண்டு வருவது அனைவரும் அறிந்ததே.பயர்பாக்ஸ் இணைய உலாவியில் எளிதாக நீட்சிகளை உருவாக்கமுடியும். இதுவும் இது பிரபலமாக இருப்பதற்கு ஒரு காரணம். உலகெங்கும் உள்ள கொந்தர்கள் பலதரப்பட்ட வசதிகளை கொடுக்கும்
பயர்பாக்ஸ் நீட்சிகளை உருவாக்கி வருகிறார்கள்.
பயர்பாக்ஸ் செயலியில், எந்த ஒரு வெளிச்செயலியையும் நிறுவாமல் தமிழில் தட்டெழுத வசதிதரும் ஒரு நீட்சி உருவாக்கப்பட்டு கடந்த பொங்கல் தினத்தில் தமிழா குழு சார்பில் வெளியிடப்பட்டது. பார்க்க:
http://tamilkey.mozdev.org
Posted by mugunth at 12:18 PM. Filed under: தமிழ்ப்பதிவுகள்
2 comments • Permalink
"ஹலோ சார், உங்களதான். சௌக்கியமா? என்னை ஞாபகமிருக்கா?"
"ஓ நீங்களா? சௌக்கியம்ங்க, பார்த்து ரொம்பநாள் ஆச்சு இல்லை?"
"அட போங்க சார், எத்தனை மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பினேன். ஒரு பதிலும் காணும்."
"ஆமாங்க உங்க மின்னஞ்சல் எல்லாம் வந்தது. எத்தனை கேள்விகள் ஒவ்வொரு அஞ்சலிலும். எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. நீங்க ரொம்ப புத்திசாலி, சுலபமா நிறைய கேள்விக்குறிகளை மட்டும் போட்டு கடிதம் அனுப்பிட்டீங்க. எனக்கு ஒன்னும் புரியலை. "
"என்ன சொல்றீங்க ஒன்னும் புரியலையே, நல்லா தமிழ்ல தான் டைப் பண்ணினேன்."
"விளையாடாதீங்க. வெறும் ?????? ?*&%??? ???!@?? %$^$^$??? இப்படியெல்லாம் சொன்னா எனக்கு என்ன புரியும்ங்க."
"அட ராமா. நீங்க விண்டோஸ் 98 கேஸா? நான் ஒருங்குறி [Unicode] எழுத்துருல [font] அனுப்பினேங்க. அதை படிக்க பெருசா ஒன்னும் செய்யத்தேவையில்லை. நீங்க என்ன இயங்குதளம் பயன்படுத்தறீங்க?"
"வீட்ல விண்டோஸ் 98/ பழைய விண்டோஸ் XP இரண்டும் இருக்கு, ஆஃபீஸ்ல தான் லேட்டஸ்ட் - விண்டோஸ் 2000."
"சார், XP தாங்க லேட்டஸ்ட். 2000/XP இரண்டிலும் ஒருங்குறியை சுலபமா அமைக்க வழிகள் இருக்கு ஆனா இந்த விண்டோஸ் 98 நிலைமை நம் எதிரிக்கு கூட வரக்கூடாது."
"ஓஹோ அதுக்கு அப்புறம் இந்த தமிழ்ல டைப் அடிக்கறது எல்லாம் ஈஸியா?"
"ஆமாங்க. அதுக்கெல்லாம் தனியா கலப்பை இருக்கு. நீங்க பிரவுசர், ஆஃபீஸ் எதுலா வேனா தமிழ்ல சுலபமா அடிக்கலாம். சொல்லப்போனா கூகிள்ல தேடலாம். விக்கிபீடியால கூட தமிழ்ல கட்டுரைகள் வர ஆரம்பிச்சிருக்கு."
"ஓ எனக்கு தெரியுமே, நான் கூட விக்கிபீடியால அந்த குஷ்பூவோட ஃபோட்டோவை பார்த்தேனே. மீதி இனிமேதான் படிக்கனும்."
"அய்யோ நீங்க வேற, அது விக்கிபீடியா இல்லை மேக்ஸிம் பத்திரிக்கை, அதுகூட தமிழ்ல இல்லை."
"அட இவ்ளோ சொல்லறியே அந்த விண்டோஸ் என்ன இருந்தாலும் இங்கிலீசுல தான இருக்கு. அதுக்கு தமிழ்ல ஈடு கிடையாதே!"
"இருக்கே தமிழ்ல ரெட் ஹேட்/ஃபெடோரா அல்லது மாண்ட்ரிவா லினக்ஸ் எல்லாம் இருக்கே. நீங்க சொன்னா நானே நிறுவிதரேன்."
"இருக்கட்டும்பா. நான் தமிழுக்கு மாத்திட்டு என்ன பண்ணப்போறேன். வெறும் அஞ்சல் அடிக்கலாம்..."
"அட இல்ல சார், நீங்க உங்க அனுபவங்களை வைச்சு தமிழ்ல வலைப்பதிவெல்லாம் எழுதலாம். அதை உலகம் முழுக்க மக்கள் படிக்கலாம்."
"ஆமாமா நம்மகிட்ட மத்தவங்க கத்துக்க நிரைய இருக்கு. நிரைய சொல்லலாம், என்ன நேரம் கிடைக்கறது இல்லை. இப்ப கூட அவசர வேலையா தான் போயிகிட்டிருக்கிறேன். அது கூட கம்ப்யூட்டர் சம்பந்தமா தான்."
"அப்படியா, ஓ நான் உங்களை தாமதப் படுத்த விரும்பலை. நீங்க வேனா கிளம்புங்க சார்."
"அது வந்து நான் தான் எங்க ஆபீஸ்ல கம்ப்யூட்டர் இன்-சார்ஜ் இல்லையா, அதனால நம்ம மச்சினி கேட்டுச்சு, கம்ப்யூட்டர் ஆபரேட் பண்ண கத்துகுடுங்க மாமா அப்படினு. அதான் போயிட்டிருக்கேன்."
"அய்யய்யோ ரொம்ப சாரி சார், நீங்க உடனே கிளம்புங்க." (ஆமாய்யா நாட்டுக்கு ரொம்ப முக்கியம்னு இதுக்கு அவசரமா போற நீ, எல்லாம் நேரம்.)
"சரிப்பா அப்ப வரேன், அடுத்த வாரம் நீ சொன்னத வெச்சு வாராவாரம் நான் எழுதற பத்தில போட்டுடறேன். வரட்டுமா?"
"ரொம்ப நல்லது சார்." (சீக்கிரமா போங்க, இல்லனா நாடு உருப்புட்ற போகுது. ஹும்...)
[விரிவான தமிழ் மென்பொருட்கள் அறிமுகத்துக்கு நம்ம மையத்துக்கு போங்க.]
Posted by yagna at 08:18 AM. Filed under: General
2 comments • Permalink
அன்பின் நண்பர்களே
வணக்கம்.
மேம்பாட்டாளர்களுக்கான இந்த வலைப்பதிவை ஆரம்பித்திருப்பது பயனளிக்கக் கூடிய ஒன்று. நீண்ட காலமாகவே கணினித்தமிழுக்கும், திறவூற்று மென்பொருட்களுக்கும் பயனுள்ள பல சேவைகளைச் செய்துதரும் தமிழாவின் இந்த வலைப்பூ வாசகர்களுக்கு நல்ல செய்திகளைக் கொண்டுதரவேண்டும் என்ற ஆசையை, வேண்டுகோளாக வைக்கிறேன்.
நுட்பம் பற்றிய வலைப்பூக்கள் மிகச் சிலவே உள்ளன. புதிதாக அறிமுகமாகும் நுட்பங்கள் பற்றியும் அவைகளில் தேவையானதை தமிழுக்குக் கொண்டுதரவும் இத்தகு வலைப்பூக்கள் உதவவேண்டும். பெரும்பாலான நுட்பியல் வலைப்பூக்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும், தமிழில் நுட்பம் சார்ந்த செய்திகளைப் படிப்பதில் நல்ல புரிதல் கிடைக்கிறது. அதோடு படிக்க ஆர்வமாகவும் இருக்கிறது. புதிய செய்திகளை எளிய தமிழில் அளிக்க தமிழா ஆர்வளர்கள் காத்திருப்பது மக்களுக்குத் தெரியும். நண்பர்களோடு சேர்ந்து நானும் காத்திருக்கிறேன்.
தமிழாவின் புதிய செயல்திட்டங்களைப் பற்றியும் எழுதுவது தமிழாவில் என்ன நடக்கிறது என்பதனை அறிய உதவும். மேலும் பிற பயனுள்ள செயல்திட்டங்களைப் பற்றியும் அறிந்தவர்கள் எழுதினால் மிக உபயோகமாய் இருக்கும். ஒருத்தர் எத்தனை தளங்களுக்குச் சென்று செய்திகளைப் படிக்க முடியும் சொல்லுங்கள்?
முதற்கணக்கை விக்ஷனரியில் இருந்து துவக்குவது பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். அனைவருக்கும் தெரிந்ததுதான். என்றாலும் புதிய பயனாளர்களுக்காக இந்தப் பதிவு. நான் விட்டுப்போனதை நண்பர்கள் சேர்த்தால் பதிவு முழுமை பெறும்.
விக்ஷனரியின் வலை தளம்: http://ta.wiktionary.org/
பேரைப் பார்த்தாலே நமது விக்கி வலை என்று நமக்குப் புரிந்து விடும். இந்த விக்கி ஒரு சொற்களஞ்சியமாக எதிர்காலத்தில் செயல்படலாம்.
பொதுவாக கடிதங்கள், அறிக்கைகள் எழுதுகையில் வார்த்தைகளின் தேவை அதிகமாக இருக்கும். அத்தகு சமயங்களில் டிக்ஷனரி கொண்டோ, தமிழில் ஏற்கனவே ஓரளவு முடிக்கப்பட்டிருக்கும் அகராதிகளைக் கொண்டோ வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இவற்றுக்கான உலகலாவிய செயல்திட்டம்தான் விக்ஷனரி.
விக்கியின் மற்ற செயல்திட்டங்களைப் போலவே கட்டற்ற முறையில் யாவரும் பங்கேற்கும் வண்ணம் திறந்த புத்தகமாக விக்ஷனரியும் உள்ளது. நண்பர் சேது தமிழா குழுமத்தில் எழுதியது போல, யுனிகோடு முறையில் அமைந்த வெகு சில செயல்திட்டங்களில், நீண்டகால வளர்ச்சி வக்ஷனரிக்கு அமையும்.
முன்பக்கத்திலேயே தமிழ் மற்றும் ஆங்கில வரிசையில் சொற்களைத் தேட வசதி செய்திருக்கிறார்கள். பிறகு அகர வரிசைப்படி சொற்களை அடுக்குகிறார்கள். தற்சமயம் 1200 வார்த்தைகளுக்கு மேல் கொண்டிருக்கும் விக்ஷனரி, சில காலத்தில் நண்பர்களின் கூட்டு முயற்சியால் ஒரு சொற்களஞ்சியமாக உருவாகும்.
தேடுதலும் வசதியாக இருக்கிறது. ஒரு வார்த்தைக்கு என்ன பொருள், அதன் மற்ற மொழிச் சொற்கள் என்ன, அதன் இலக்கணப் பொருள் என்ன என்பதை எல்லாம் எழுத வாய்ப்பிருக்கிறது. பல கடினமான ஆங்கில வார்த்தைகளை அழகுதமிழில் நண்பர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
கடையைத் திறந்துவிட்டனர். கொள்வது நமது பொறுப்பு. தமிழா நண்பர்களும், பயனாளர்களும் ஏனைய தமிழர்களும் விக்ஷனரி செயல்திட்டத்தில் இணைந்து அவர்களுக்குத் தெரிந்ததை பதிவு செய்தால் மிகவும் உபயோகமாக இருக்கும். இன்றே கணக்கைத் துவக்குங்கள். சொற்கள் சேர்ப்பு, தொகுப்பு என்று உங்கள் பங்களிப்பை வாரி வழங்குங்கள்.
மேலும் விக்ஷனரி பற்றி நண்பர்கள் எழுதி வாசகர்களை ஊக்குவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
Posted by barathee at 03:20 AM. Filed under: General
4 comments • Permalink
இரண்டு நாட்களுக்குமுன் நண்பர் யக்ஞாவுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, ஏன் தமிழா குழுவிற்கென்று ஒரு வலைப்பதிவைத் தொடங்கக்கூடாது என்று தோன்றியது. இதில் தமிழாகுழுவின் திட்டங்கள் பற்றியும், கணினி மற்றும் திறவூற்று மென்பொருள் உலகில் நடக்கும் புதியச் செய்திகளைப்பற்றியும் அவ்வப்போது தமிழா குழு உறுப்பிணர்கள் வலைப்பதியலாம் என்று முடிவு செய்தோம். அதன்படி இப்பதிவுத் தொடங்கப்பெற்றது.
Posted by mugunth at 10:48 AM. Filed under: General
4 comments • Permalink